சென்னை: பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், பெண்களுக்கு சுயதொழில் வாய்ப்பை உருவாக்குவதற்கும் தமிழக அரசு பிங்க் ஆட்டோ திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் கீழ் சென்னையில் வசிக்கும் ஓட்டுநர் உரிமம் பெற்ற பெண்களுக்கு மூன்றாம் கட்டமாக விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பெண்களின் பாதுகாப்பு மற்றும் அதிகாரமளிப்பு நோக்கத்துடன் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

அந்த வகையில் கடந்த மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினத்தில் சென்னையில் 250 பிங்க் CNG ஆட்டோக்கள் வழங்கப்பட்டன. இவ்வாறு வழங்கப்பட்ட ஆட்டோக்களில் GPS வசதி பொருத்தப்பட்டிருப்பதால் காவல்துறை அவசர உதவி எண்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. அவசர காலங்களில் பெண்களுக்கு விரைவான பாதுகாப்பு வழங்கும் வகையில் இந்தத் திட்டம் சிறப்பாக அமைகிறது.
மேலும், இளஞ்சிவப்பு ஆட்டோக்களில் பயணிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் கிடைப்பதோடு, பெண் ஓட்டுநர்களுக்கு தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வாய்ப்பும் கிடைக்கிறது. ஊர் கேப்ஸ் செயலியின் மூலம் பயணிகள் எளிதாகப் பயன்படுத்தும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் கமிஷன் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படமாட்டாது என அரசு உறுதி செய்துள்ளது.
பெண்களுக்கு சுயதொழில் வாய்ப்பை அதிகரிக்கும் விதமாக மூன்றாம் கட்ட விண்ணப்பங்கள் தற்போது பெறப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்புவோர் சென்னையில் நிரந்தரமாக வசிக்க வேண்டும், 20 வயது முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும், ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இந்தத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் பயனாளிகளுக்கு அரசு தலா ஒரு லட்சம் ரூபாய் மானியமாக வழங்க உள்ளது. மீதமுள்ள தொகைக்கு வங்கி கடன் வசதியும் செய்து தரப்படும். விண்ணப்பங்கள் வரும் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இதற்காக சென்னை மாவட்ட சமூக நல அலுவலர் (வடக்கு) அல்லது (தெற்கு) அலுவலகத்தில் தொடர்பு கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் பெண்களின் பாதுகாப்பையும் சுயதொழில் வளர்ச்சியையும் ஒருங்கிணைத்து செயல்படுவதால் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சென்னையில் பெண்களின் சுயநிலையை உயர்த்தும் புதிய முயற்சியாக பிங்க் ஆட்டோ திட்டம் குறிப்பிடத்தக்கது.