சென்னை: தமிழக போக்குவரத்து துறையை பொறுத்தவரை சென்னை, விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோவை உள்ளிட்ட 8 போக்குவரத்து கழகங்களில் உள்ள 26 மண்டலங்களில் உள்ள 317 பணிமனைகளில் இருந்து 10,129 வழித்தடங்களில் 20,232 பேருந்துகள் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக இயக்கப்படுகின்றன. இதில் சென்னையில் மட்டும் 3.5 லட்சம் பேர் மாநகரப் பேருந்துகளில் பயணிக்கின்றனர். தமிழகம் முழுவதும் தினமும் 1.32 கோடி பேர் பயணம் செய்கின்றனர். இந்த பஸ்கள் எந்த லாப நோக்கமும் இல்லாமல் கிராமங்களில் பொது சேவைக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதனால் போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த பேருந்துகளுக்கான டீசல் செலவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், காற்று மாசுபாட்டிற்கும் அவை காரணமாகின்றன. ஏற்கனவே, அரசு பஸ்களை டீசலுக்கு பதிலாக எலக்ட்ரிக் பஸ்கள் அல்லது இயற்கை எரிவாயு மூலம் இயக்கும் பஸ்களாக மாற்ற போக்குவரத்து துறை சார்பில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டு அதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, டீசலுக்கு பதிலாக சிஎன்ஜி (காஸ்) பயன்படுத்தினால் அதிக மைலேஜ் கிடைக்க வாய்ப்புள்ளதாக நடத்தப்பட்ட ஆய்வின்படி, தொலைதூர பகுதிகளில் இயக்கப்படும் பஸ்களை இயற்கை எரிவாயுவாக மாற்ற போக்குவரத்து கழகங்கள் முடிவு செய்தன.
இந்நிலையில், முதற்கட்டமாக 1000 டீசல் பஸ்களை சிஎன்ஜி பஸ் முறைக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக, சிஎன்ஜிக்கு (எரிவாயு) மாற்றப்படும் பேருந்துகள் அதிகபட்சம் 8 லட்சம் கிலோமீட்டருக்கும் குறைவாக இயக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், ஆறு முதல் ஏழு ஆண்டுகளுக்குள் வாங்கப்பட்ட பேருந்துகளாக இருக்க வேண்டும் என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு ரூ. 70 கோடி கொடுத்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தமிழகத்தில் டீசலுக்கு மாற்றாக அரசு பஸ்களை இயக்க பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறோம். அதன்படி, மைலேஜை அதிகரிக்கவும், காற்று மாசுபாட்டை தடுக்கவும் இயற்கை எரிவாயுவை பயன்படுத்தி பஸ்களை இயக்க திட்டமிட்டிருந்தோம். இந்த வகையில், சிஎன்ஜி எனப்படும் இயற்கை எரிவாயுவை பயன்படுத்தி இந்த பஸ்கள் இயக்கப்படுவதால், சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதில்லை. மேலும், டீசல் பஸ்களை ஒப்பிடும் போது, சிஎன்ஜி பஸ்களை இயக்குவதன் மூலம், செலவு குறைவதுடன், வருவாய் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. தற்போது, முதற்கட்டமாக டீசலில் இருந்து சிஎன்ஜிக்கு (எரிவாயு) மாற்றப்பட்ட 1000 பேருந்துகளை அடையாளம் காணும் பணியை மேற்கொண்டு வருகிறோம். எரிவாயு பஸ்களை இயக்கினால், மாசு குறையும். இவ்வாறு அவர் கூறினார்.