ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்காவில், மே மாதம் மலர் கண்காட்சியையொட்டி, 35 ஆயிரம் தொட்டிகளில், பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்படும். இதனை காண வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். மேலும் 2-வது சீசனில் 15 ஆயிரம் தொட்டிகளில் பல்வேறு மலர் அலங்காரங்கள் செய்யப்படும்.
ஆரம்ப காலத்தில் அனைத்து மலர் செடிகளும் பூங்காவில் மண் தொட்டிகளில் நடப்பட்டன. கடந்த சில ஆண்டுகளாக, பிளாஸ்டிக் பூந்தொட்டிகள் பிரபலமடைந்து வருகின்றன. தற்போது பூங்காவில் உள்ள 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பூந்தொட்டிகள் பிளாஸ்டிக் பூந்தொட்டிகளாக மாறியுள்ளன. பூங்காவில் நடவு செய்யும் பணி தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொட்டிகளில் தோட்டப்பணிகள் நடந்து வருகின்றன.
இதற்காக பூங்காவில் உள்ள 35 ஆயிரம் தொட்டிகளில் மக்கிய மண் கொட்டி தொட்டிகள் தயார் செய்யும் பணி தொடங்கியுள்ளது. கடந்த காலங்களில் பெரும்பாலான தொட்டிகள் சுற்றுச்சூழலை பாதுகாக்க மண் தொட்டிகளாக இருந்தன. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பிளாஸ்டிக் தொட்டிகள் மெல்ல மெல்ல ஆக்கிரமித்து தற்போது அனைத்து தொட்டிகளும் பிளாஸ்டிக் தொட்டிகளாக மாறிவிட்டன.
தற்போது பூங்காவில் வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான தொட்டிகள் மட்டுமின்றி, கண்ணாடி வீடுகள் மற்றும் பிற பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டிகளும் பிளாஸ்டிக் தொட்டிகளாக மாற்றப்பட்டுள்ளன. இதுகுறித்து பூங்கா அதிகாரிகள் கூறுகையில், கடந்த காலங்களில் மண் தொட்டிகள் அதிகமாக இருந்தன.
தொட்டிகள் நகர்த்தப்பட்டது மட்டுமின்றி, பல்வேறு காரணங்களால் உடைந்தும் வருகிறது. இதன் காரணமாக பாதுகாப்பு கருதி அனைத்து தொட்டிகளும் பிளாஸ்டிக் தொட்டிகளாக மாற்றப்பட்டுள்ளது என்றனர். நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை குறைக்க மாவட்ட நிர்வாகமும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால், தாவரவியல் பூங்காவில் மண் பானைகள், பிளாஸ்டிக் பூந்தொட்டிகள் காணாமல் போனது சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.