சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கோட்டூரைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. இந்நிலையில் ஞானசேகரன் குறித்து பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. துப்பாக்கி முனையில் திருட்டு, வழிப்பறி, ஆள் கடத்தல் போன்றவற்றில் ஈடுபட்டு வந்த ஞானசேகரன் தற்போது பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இலவச பிரியாணி கொடுத்து பலரை தனது நட்பு வட்டத்திற்குள் கொண்டு வந்துள்ளார். எனவே, இன்னும் பல பெண்களிடம் கைவரிசை காட்டியிருக்க வேண்டும். அதேபோல, அவர் மட்டும் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டிருக்க முடியாது. அவருக்கு பின்னால் மேலும் சிலர் இருக்க வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த ஞானசேகரனை 10 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளோம்.
மேலும், குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து தண்டனை பெற தயாராகி வருகிறோம். சமூக வலைதளங்களில் ஞானசேகரன் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. எல்லாவற்றையும் சேகரித்து அதன் உண்மைத்தன்மையை ஆராய்ந்து வருகிறோம். மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டாம் என மாணவி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஞானசேகரன் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார். வழக்கு தொடர்பான அறிவியல் தகவல்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.