சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் தற்போது ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று சென்னை, கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெற்றது. அப்போது, கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு வசதிகள் குறித்து கூடுதல் போலீஸ் கமிஷனர் கண்ணன், இணை கமிஷனர் விஜயகுமார், சென்னை மாநகர காவல் துறை உதவி கமிஷனர் ஜெயச்சந்திரன் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர்.

அப்போது அவர், ‘சென்னை சேப்பாக்கம் மைதானம் முழுவதும் 252 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம், ரசிகர்களின் செயல்பாடுகள், மைதானத்திற்கு வெளியேயும், சுற்றிலும் நடக்கும் செயல்பாடுகளை கண்காணித்து வருகிறோம். இந்தக் கண்காணிப்புப் பணியில் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும்போது, ஒவ்வொரு நபரையும் அவர்களின் செயல்பாடுகளையும் கண்காணிக்க முடியும். சந்தேகத்திற்கிடமான நபரின் முகம் அல்லது ஆடை அல்லது அதன் நிறம் ஆகியவற்றின் அடிப்படையில், மைதானத்தில் அவரது முழு செயல்பாடுகளையும் வீடியோவாக பதிவு செய்யலாம்.
சில நாட்களுக்கு முன் நடந்த விளையாட்டின் போது, ஒரே நேரத்தில் 28-க்கும் மேற்பட்ட செல்போன்கள் திருடப்பட்டன. அந்தத் திருட்டில் ஈடுபட்ட கும்பலை விரைவாகக் கண்டறியவும் இந்தத் தொழில்நுட்பம் உதவியாக இருந்தது. ஓரிரு நாளில் மற்றொரு கும்பலை கைது செய்வோம். இந்த புதிய தொழில்நுட்பத்தால், கடந்த சில விளையாட்டுகளில் குற்றங்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது, என்றனர்.