சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் அரசியலில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இதையடுத்து தவெக மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டார். பாஜக நிர்வாகிகள் மற்றும் சில தவெக நிர்வாகிகளும் கைது செய்யப்பட்ட நிலையில், கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், இணைப் பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இருவரும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். ஆனால் மதுரை கிளை உயர்நீதிமன்றம், விசாரணை பாதிக்கப்படும் என்ற காரணத்தால் மனுவை தள்ளுபடி செய்தது. “நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு இருக்க வேண்டும்” என நீதிபதி சுட்டிக்காட்டினார். அரசு தரப்பு, சம்பவம் விபத்து அல்ல, போலீசார் தடியடி காரணமல்ல என்றும் வாதாடியது.
இதையடுத்து போலீசார், இருவரையும் கைது செய்ய தனிப்படை அமைத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். சென்னை, சேலம், மதுரை, ஈரோடு உள்ளிட்ட பல இடங்களில் தேடுதல் வேட்டை நடக்கிறது. ஆனந்துக்கு நெருக்கமான உறவினர்கள், நிர்வாகிகள் மீதும் விசாரணை நடைபெறுகிறது.
தற்போது இருவரும் தலைமறைவாக உள்ளனர். எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு குறித்து அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.