தஞ்சாவூர்: தஞ்சை அருகே வல்லம் பிரிஸ்ட் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் பொங்கல் விழா மாணவ, மாணவிகளால் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
தஞ்சாவூர் அருகே வல்லம் உள்ளது பிரிஸ்ட் நிகர்நிலைப் பல்கலைக்கழகம். இங்கு பல்வேறு பாடப்பிரிவுகளில் ஏராளமான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். பொங்கல் பண்டிகையை ஒட்டி நேற்று இங்கு பொங்கல் விழா சிறப்பாக நடந்தது.
இதற்காக கல்லூரி வளாகம் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மாணவர்கள், மாணவிகள் கரும்புகள் வைத்து பானையில் பொங்கல் வைத்து பொங்கி வந்தபோது பொங்கலோ பொங்கல் என்று உற்சாக குரலெழுப்பி கொண்டாடினர். தொடர்ந்து நடந்த பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு பதிவாளர் டாக்டர் அப்துல் கனிகான் வரவேற்புரையாற்றினார். டாக்டர் எத்திராஜலு தலைமை வகித்து பேசினார். சிறப்பு விருந்தினராக வேந்தர் டாக்டர் பொன்னையா நாகேஸ்வரன் மாணவ, மாணவிகளை வாழ்த்தி பேசினார்.
சிறப்பு விருந்தினராக தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி கலந்து கொண்டு பொங்கல் விழாவின் முக்கியத்துவம் பற்றியும், மாணவ, மாணவர்கள் சமுதாயத்திற்காக எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்தும், தங்கள் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தி பேசினார். துணைவேந்தர் டாக்டர் கிறிஸ்டி, முதன்மை செயல் அலுவலர் டாக்டர் வெங்கடா ஆகியோர் மாணவர்களுக்கு தேவையான ஆலோசனை வழங்கி பேசினர்.
பின்னர் பொங்கல் விழாவை ஒட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை சிறப்பு விருந்தினர் தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி வழங்கினார். இணைவேந்தர் டாக்டர் உதயகுமார் நன்றி கூறினார்.