தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி 2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியில் உயர்கல்வி மற்றும் கனிம வளத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது வானூர் அருகே பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரிகளில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லாரிகளில் செம்மண்ணை எடுத்ததாக பொன்முடி மீது குற்றச்சாட்டு எழுந்தது. விழுப்புரம் மாவட்டத்தில் அரசுக்கு ரூ.28 கோடியே 36 லட்சத்து 40,600 இழப்பு ஏற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து, 2012-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, உறவினர்கள் உள்ளிட்டோர் மீது விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், இது தொடர்பாக அமலாக்க இயக்குனரகமும் கடந்த ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. அதைத் தொடர்ந்து அமைச்சர் பொன்முடி, அவரது மகனும், முன்னாள் எம்பியுமான கெளதம சிகாமணி மற்றும் அவர்களது கூட்டாளிகளுக்கு சொந்தமான 7 இடங்களில் அமலாக்க இயக்குனரக அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, ரூ.81.7 லட்சம் ரொக்கம், ரூ. 13 லட்சம் வெளிநாட்டு நாணய மதிப்பு அமைச்சர் பொன்முடி வீட்டில் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.41.9 கோடி பறிமுதல் செய்யப்பட்டு, நிரந்தர வைப்புத் தொகையான வங்கி கணக்கில் இருந்த ரூ. 41.9 கோடி ரூபாய் முடக்கப்பட்டது.
இதையடுத்து அமைச்சர் பொன்முடி விசாரணைக்காக சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்க இயக்குனரக அலுவலகத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டார். மேலும், அவரது அசையும் மற்றும் அசையா சொத்து மதிப்பு ரூ. 14.21 கோடி முடக்கப்பட்டது. இதனிடையே, இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரிக்க அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்க இயக்குனரக அதிகாரிகள் சில நாட்களுக்கு முன்பு மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இதையடுத்து நேற்று காலை 11.30 மணிக்கு சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அமலாக்க இயக்குனரகத்தின் மற்றொரு அலுவலகத்தில் பொன்முடி நேரில் ஆஜரானார். அவரிடம் அமலாக்க இயக்குனரக அதிகாரிகள் 5 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர். குறிப்பாக, ஏற்கனவே சோதனை செய்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு பொன்முடி அளித்த பதில்களை, அமலாக்க இயக்குனரகம் அறிக்கையாக பதிவு செய்தது. இது வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.