சென்னை: சென்னை தியாகராய நகர் பால மந்திர் காமராஜ் அறக்கட்டளையின் முன்னாள் தலைவரும், உயர்நீதிமன்ற முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞருமான எஸ்.கோவிந்த் சுவாமிநாதன் நினைவாக பாலமந்திர் கலாச்சார மையத்தில் சட்டக் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பாலமந்திர் இணை செயலாளர் லீலா நடராஜன் வரவேற்றார்.
அறக்கட்டளை செயற்குழு உறுப்பினர் வக்கீல் ஜி.அன்புமணி தலைமை வகித்தார். சட்டக் கல்விக்கான தொழில் வாய்ப்பு என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கான இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் கலந்து கொண்டார். அவர் கூறியதாவது:- பொதுவாக, சட்டக் கல்வி என்பது உயர்சாதியினருக்கானது என்ற எண்ணம் பலருக்கு இருக்கும்.
இந்த மனநிலை மாற வேண்டும். ஏழை எளிய மாணவர்களும் சட்டம் படித்து நல்ல ஆளுமைகளாக முத்திரை பதிக்க முடியும். அதற்கு நேர்மையும் கடின உழைப்பும் தேவை. இன்றைய தலைமுறையினர் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகின்றனர்.
சட்டக் கல்வியில் சாதனை படைத்த மூத்த வழக்கறிஞர்கள், நீதிபதிகள் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் அடிக்கடி பங்கேற்று மாணவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். சட்டக் கல்வி என்பது தொழில் வாய்ப்பு மட்டுமல்ல. சராசரி மனிதனை சமுதாயத்திற்கு சேவை செய்யும் மனிதாபிமானமுள்ள மனிதனாக மாற்றுகிறது. மற்ற துறைகளுடன் ஒப்பிடும் போது, சட்டம் படிப்பவர்களுக்கு சமூகத்தில் அதிக மதிப்பும் மரியாதையும் செல்வமும் கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் நடைபெற்ற பட்டிமன்றத்தில் அவருடன் மூத்த வழக்கறிஞர்கள் ஸ்ரீராம் பஞ்சு, என்.எல்.ராஜா, சி.மணிசங்கர், டி.மோகன், பி.நடராஜன் ஆகியோரும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.
உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஜெ.சரவணவேல், திவாகர், விஷால், சுக்ரித் பார்த்தசாரதி, யோகேஸ்வரன், சாருலதா, தன்வீர், அத்வைத், பிரணவ், ஷகானா, கார்த்திக், கிருஷ்ணஸ்ரீ ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் மாணவர்களுடன் கலந்துரையாடினர். நிகழ்ச்சியில் பங்கேற்ற வழக்கறிஞர்களை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பாராட்டினார். நிறைவில் சுஷ்மிதா நன்றி கூறினார்.