கரூர்: கரூரில் இரண்டாம் நாளாக தபால் வாக்கு சேகரிப்பு தீவிர அடைந்துள்ளது.
வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 40% மேல் மாற்றுத்திறனாளிகள் எளிதில் வாக்களிக்க தபால் வாக்கு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், தேர்தல் அதிகாரிகள் நேரடியாக அவர்களின் வீடுகளுக்குச் சென்று வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தில் இந்த தபால் வாக்குப்பதிவு பணி இன்று இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 12ஆம் தேதி தொடங்கிய இந்த செயல்முறை 14ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. அதிகாரிகள் வீடு தோறும் சென்று வாக்குகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.