சென்னை: சுவாசத் தொற்றுகளை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை வழிமுறைகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும். இதுகுறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர் அர்பிதா தெரிவித்துள்ளார்.
சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று பரவியது. இதனால் பலர் உயிரிழந்தனர். இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவி பேரழிவை ஏற்படுத்தியது. கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு, மக்கள் அனைவரும் அதை மறந்து வரும் நிலையில், சீனாவில் மீண்டும் புதிய வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த புதிய வைரஸ் ‘ஹியுமன் மெடா நியூமோ வைரஸ்’ (எச்.எம்.பி.வி.) என்று அழைக்கப்படுகிறது. இந்த வைரஸ் சீனாவில் தற்போது அதிக அளவில் பரவி வருகிறது என்றும், இதனால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பகிரப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த வைரஸ் பரவி உள்ளதா என்பது குறித்து மத்திய சுகாதாரப் பணிகள் தலைமை இயக்குநர் கூறுகையில், ‘ஹியூமன் மெட்டாநிமோ வைரஸ்’ (ஹெச்எம்பிவி) என்பது சாதாரண சளியை ஏற்படுத்தும் பிற வைரஸ் போன்றதே. இது, இளம்வயதினர் மற்றும் முதியோருக்கு காய்ச்சல், தொண்டை வலி, உடல்வலி போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தக் கூடும்.
சீனாவில் ஹெச்எம்பிவி வைரஸ் வேகமாக பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, இந்தியாவில் சுவாசத் தொற்றுகள் மற்றும் பருவகால புளூ காய்ச்சல் பாதிப்புகளை தொடர்ந்து உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். இச்சூழலில் யாரும் அச்சப்பட தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.
சுவாசத் தொற்றுகளை தடுக்கும் வகையில் பொதுவான முன்னெச்சரிக்கை வழிமுறைகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும். இதுகுறித்து மக்கள் அச்சப்படாத வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். புதிய வைரஸ்கள் இந்தியாவில் பரவாத வகையில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மக்களின் நலன் மீது உரிய அக்கறை கொண்டு விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.