சென்னை: தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகள் காலாண்டு விடுமுறை முடிந்து வரும் 7-ம் தேதி திறக்கப்பட உள்ளதால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பள்ளிகளுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் பள்ளி பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் சுயநிதி பள்ளிகளுக்கு செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 6 வரை காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விடுமுறை முடிந்து, வரும் திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்படுகின்றன. பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளிகளில் வகுப்பறைகள் உட்பட வளாகம் முழுவதும் தூய்மைப் பணியை மேற்கொள்ள வேண்டும். மதிப்பீடு செய்யப்பட்ட காலாண்டு தேர்வு விடைத்தாள்களை பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
அதேபோல், இரண்டாம் பருவத்துக்கான பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட பாடப்புத்தகங்களையும் உடனடியாக வழங்க வேண்டும். மேலும், பருவ மழையை கருத்தில் கொண்டு பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு ஏற்கனவே மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.
தற்போது பல மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் மாணவர்களின் நலன் கருதி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது தவிர, இரண்டாம் பருவத்திற்கான கற்றல்-கற்பித்தல் செயல்திட்டங்கள் மற்றும் கலை விழா போட்டிகளுக்கான நடைமுறைகள் குறித்து ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்ற தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.