சென்னை: நேற்று இரவு 160 பயணிகளுடன் சென்னையிலிருந்து பெங்களூருக்கு சென்ற இண்டிகோ விமானம் நடுவானில் பறக்கும் போது திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, விமானம் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 5 பணியாளர்கள் மற்றும் 160 பயணிகளுடன் சென்னையில் இருந்து பெங்களூருக்கு சென்ற இண்டிகோ விமானம் நேற்றிரவு புறப்பட்டது.
நடுவானில் பறக்கும் போது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. காஞ்சிபுரத்தைக் கடந்த பிறகு வேலூர் அருகே நடுவானில் பறக்கும் போது இயந்திரக் கோளாறு கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து, விமானி உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து, விமானம் சென்னைக்குத் திரும்பி அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானி சரியான நேரத்தில் சிக்கலைக் கண்டறிந்து, உடனடி நடவடிக்கை எடுத்து, விபத்தைத் தவிர்த்தார். விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
விமானப் பொறியாளர்கள் விமானத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் உடனடியாக கோளாறை சரிசெய்ய முடியாததால், 160 பயணிகளும் மாற்று விமானத்தில் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பயணிகள் சரியான நேரத்தில் தங்கள் இலக்கை அடைய முடியாமல் அவதிப்பட்டனர்.