வேலூர்: ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, மேட்டூர் பச்சமலை, தேனி குரங்கணி, ஆத்தூர் கல்வராயன்மலை, களக்காடு முண்டந்துறை உள்ளிட்ட தமிழக வனப்பகுதிகளில் 44 இடங்களில் மலையேற்றப் பாதைகள் (டிரெக்கிங்) உள்ளன. மலையேற்றப் பயிற்சிக்காக ஆங்காங்கே தனித்தனி குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. இதற்காக ஒவ்வொரு பகுதியிலும் வனக்காப்பாளர் மற்றும் மாவட்ட வன அதிகாரியிடம் அனுமதி பெறப்படுகிறது.
2018-ல் தேனி மாவட்டம் குரங்கணியில் மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தனர். இதில், 20-க்கும் மேற்பட்டோர் உடல் கருகி பலியாகினர். இதனால் கோடை காலத்தில் மலையேறும் பயிற்சிக்கு அனுமதி இல்லை என்ற முடிவுக்கு வனத்துறையினர் வந்துள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், மலைப்பகுதிகளில் ஆங்காங்கே காட்டுத் தீ கொழுந்துவிட்டு எரிகிறது.
இதனால் மலைப்பாதைகளில் மலையேறும் பயிற்சிக்கு தடை விதித்து வனத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- தமிழகத்தில் கோடை காலம் துவங்கியுள்ளது. இதனால் திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி, சேலம் மாவட்டம் ஏற்காடு, மேட்டூரில் பச்சமலை, ஆத்தூரில் கல்வராயன் உள்ளிட்ட மலைப் பகுதிகளில் கோடை காலம் முடியும் வரை லாரிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோடை தீ விபத்துகளின் போது, யாரும் வனப்பகுதியில் சிக்காமல் இருக்க மலையேற்ற பயிற்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மலைப் பகுதிகளில் தீ தடுப்பு பணிகளை மேற்கொள்ள வனத்துறை அதிகாரிகளை நியமித்துள்ளோம். தடையை மீறி மலையேறும் பயிற்சிக்கு சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறினார்கள்.