சென்னை: வீட்டு வசதி வாரிய கே.கே.நகர் கோட்டத்திற்கு உட்பட்ட திட்டப் பகுதிகளில் வீட்டுமனை மற்றும் மனை ஒதுக்கீடுதாரர்கள் நிலுவைத்தொகையை செலுத்தி ஒதுக்கீடு ரத்து செய்வதைத் தவிர்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட செய்திக்குறிப்பு:-
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், கே.கே.நகர் கோட்டத்திற்கு உட்பட்ட அரும்பாக்கம், கே.கே.நகர். மதுரவாயல், அசோக் நகர், எம்டிபி திட்டம், ராஜா அண்ணாமலைபுரம். விசாலாக்ஷி கார்டன், மாந்தோப்பு காலனி, 144-ராமாபுரம், 16-வளசரவாக்கம், 428-புலியூர், பழைய ராமாபுரம், சிஐடி நகர் மேற்கு, நெசப்பாக்கம், 384-ராமாபுரம், 48-புலியூர், மரவேலைப் பிரிவு திட்டத்தில் பல அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் மனைகள் ஒதுக்கப்பட்டவர்கள் உள்ளனர்.
வாரிய விதிகளின்படி திருப்பி செலுத்தும் காலம் முடிந்தும், தமிழக அரசு பல வட்டி தள்ளுபடியை அறிவித்தும் நீண்ட நாட்களாக நிலுவைத் தொகையை செலுத்த மக்கள் முன்வரவில்லை. எனவே, ஒதுக்கீட்டாளர்கள் தங்களின் ஒதுக்கீட்டு ஆணை, பணம் செலுத்திய ரசீது மற்றும் ஒதுக்கீடு தொடர்பான அசல் ஆவணங்களுடன் அலுவலக வேலை நாட்களில் கே.கே.நகர் கோட்ட அலுவலகத்தை தொடர்பு கொண்டு, இந்த அறிவிப்பைப் பார்த்த பிறகு கணக்கைத் தீர்த்து, நிலுவைத் தொகையைச் செலுத்த வேண்டும்.
மேலும், வாரிய விதிமுறைகளின்படி கொள்முதல் கிரயப்பத்திரம் பெறலாம். இதனால் ஒதுக்கீடு உத்தரவை ரத்து செய்யும் நடவடிக்கை தவிர்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.