சென்னை: தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் 3-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை நடக்கிறது. அதேபோல் நடைமுறை தேர்வுகள் பிப்ரவரி 7-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நடக்கிறது. இதற்கான மாணவர் பட்டியல் மற்றும் தேர்வு மையத்தை அமைத்தல் ஏற்பாடுகளை தேர்வுத்துறை தீவிரமாக செய்து வருகிறது.
இந்நிலையில், 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அகமதிப்பீட்டு மதிப்பெண் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தேர்வுத்துறை தற்போது வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, தேர்வுத் துறை இயக்குனர் லதா அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, ஒவ்வொரு பாடத்திற்கும், அகமதிப்பீட்டு மதிப்பெண்கள் வழங்குவதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, 81-100 சதவீத மாணவர் வருகைக்கு 2 மதிப்பெண்ணும், 75-80 சதவீத வருகைக்கு ஒரு மதிப்பெண்ணும் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகள் அதில் இடம் பெற்றுள்ளன. இதை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்ப வேண்டும். இதைத் தொடர்ந்து, வருகைப் பதிவேடுகள், பள்ளித் தேர்வுகள், செயல்திட்டங்கள், இணைப் பாடத்திட்டங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர்களுக்கு அகமதிப்பீட்டு மதிப்பெண்கள் ஒதுக்கப்பட வேண்டும்.
இது தொடர்பாக அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்க வேண்டும்,” என சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.