சென்னை: குவாரி உரிமையாளர்களின் போராட்டத்துக்கு தீர்வு காண வேண்டும் என, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம், முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, சங்கத் தலைவர் ஆர்.முனிரத்தினம், முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் கட்டுமானத் தொழில்களுக்கு, தினமும், 10 ஆயிரம் லோடு மணல், எம்சாண்ட், கருங்கல் ஜல்லிகள் தேவைப்படுகின்றன.

சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களுக்கு மட்டும் தினமும் 3,000 லோடு தேவைப்படுகிறது. இந்நிலையில் குவாரிகளில் இருந்து கல் உடைத்து கொண்டு வர வழங்கப்பட்ட அனுமதிகளுக்கு கன மீட்டர் அடிப்படையில் அரசுக்கு வரி செலுத்தப்பட்டுள்ளது. இப்போது மெட்ரிக் டன் அடிப்படையில் வரி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை எதிர்த்து, குவாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் தமிழகம் முழுவதும் 1.50 லட்சம் டிப்பர் லாரிகள் ஓடவில்லை. இதனால் கட்டுமான பணிகளுக்கு தேவையான மணல், எம்சாண்ட், கருங்கல் ஜல்லி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக லாரி ஓட்டுநர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் உட்பட 90 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, கிரஷர், குவாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தில் முதல்வர் தலையிட்டு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.