எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களின் மூன்று படகுகளை இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது மட்டுமின்றி, கடந்த 21ம் தேதி 37 மீனவர்களையும் கைது செய்தது. கைது செய்யப்பட்ட 37 பேரும் கங்கேசன் கடற்படை தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் அடங்குவதற்குள் தமிழகத்தை சேர்ந்த 5 மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து கைது செய்தனர். இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அது மட்டுமின்றி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (27-09-24) பிரதமர் மோடியை சந்தித்து, இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில், தமிழக மீனவர்கள் பிரச்னை தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‘எல்லை தாண்டி மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த 21ம் தேதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மயிலாடுதுறை மீனவர்கள் 37 பேரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல், மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு, இலங்கை அதிகாரிகளிடம் பேசி, தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றார்.