சென்னை: ரயில்வேயில் முதல் தொழிற்சங்க அங்கீகார தேர்தல் 2007-ல் நடத்தப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் மட்டுமே ரயில்வே நிர்வாகத்துடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்க முடியும். 2013 தேர்தலில் தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்ஆர்எம்யு) 43 சதவீத வாக்குகள் பெற்று அங்கீகரிக்கப்பட்ட யூனியனாக தேர்வு செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது.
கொரோனா பாதிப்பு உள்ளிட்ட சில காரணங்களால், சங்க அங்கீகாரம் தேர்தல் நடத்தப்படவில்லை. இதனிடையே, ரயில்வே யூனியன் அங்கீகாரத் தேர்தல் டிசம்பர் 4, 5, 6 ஆகிய தேதிகளில் நடைபெறும் என ரயில்வே வாரியம் 3 மாதங்களுக்கு முன்பு அறிவித்தது. ரயில்வேயின் 17 மண்டலங்களில் பணிபுரியும் 12.20 லட்சம் ஊழியர்களின் ஆதரவைப் பெற ரயில்வே தொழிற்சங்கங்கள் தயாராகி வருகின்றன. தெற்கு ரயில்வே அங்கீகாரத் தேர்தலில் போட்டியிடும் ரயில்வே தொழிற்சங்கங்களின் இறுதிப் பட்டியலை கடந்த மாதம் தெற்கு ரயில்வே வெளியிட்டது.
தொழிற்சங்கங்களில் தெற்கு ரயில்வே ஊழியர்கள் சங்கம், தெற்கு ரயில்வே கர்மிக் சங்கம், ரயில் மஸ்தூர் யூனியன், தெற்கு ரயில்வே ஊழியர் சங்கம் மற்றும் தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் ஆகியவை அடங்கும். இந்த சங்கங்களைச் சேர்ந்தவர்கள் பல்வேறு இடங்களில் ரயில்வே ஊழியர்களிடம் வாக்கு சேகரித்தனர். இந்நிலையில் ரயில்வே தொழிற்சங்க அங்கீகார தேர்தல் இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது.
3-வது நாளான இன்று ரயில் ஓட்டுனர்கள் மற்றும் கார்டு ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள 38 வாக்குச் சாவடிகள் உட்பட தெற்கு ரயில்வேயில் உள்ள 140 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. சுமார் 76 ஆயிரம் தொழிலாளர்கள் வாக்களிக்க உள்ளனர். டிசம்பர் 12-ம் தேதி வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிக்கப்படும்.
மொத்த வாக்குகளில் 30 சதவீத வாக்குகளைப் பெறும் தொழிற்சங்கத்துக்கு ரயில்வேயின் அங்கீகாரம் கிடைக்கும். ரயில்வே ஊழியர்களின் பிரச்சனைகள் தொடர்பாக நிர்வாகத்துடன் நடைபெறும் பேச்சுவார்த்தையில் இந்த தொழிற்சங்கம் நேரடியாக பங்கேற்க முடியும். 15 சதவீத வாக்குகள் பெறும் சங்கம் கூட்டங்கள் நடத்தவும், அறிவிப்பு பலகை வைக்கவும் அனுமதிக்கப்படும்.