திருநெல்வேலி: திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து, இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இன்று சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்றும் கூறியுள்ளனர். இதனிடையே, திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.
தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றார். தூத்துக்குடி, மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால், தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்தது. இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் இரண்டாவது நாளாக நேற்றும் கடலுக்கு செல்லவில்லை.

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள 265 விசைப் படகுகளும் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன. நாட்டுப்படகுகளும் பாதுகாப்பாக கரையில் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு கீழவைப்பார், சிப்பிகுளம், வேம்பார், பெரியசாமிபுரம் ஆகிய பகுதிகளில் பலத்த காற்று வீசியது.
இதனால் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. அலைகள் படகுகளை கரைக்கு தள்ளியதால் நாட்டுப்படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதமடைந்தன. மொத்தம் 13 நாட்டுப்படகுகள் சேதமடைந்தன. மேலும், படகுகளில் இருந்த பல வலைகள் கடல் அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டன. இதனால் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.