வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்றும், நாளையும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:-
தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை, வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலவியது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தொடர்ந்து நாளை மத்திய மேற்கு வங்கக்கடலில் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடலில் படிப்படியாக வலுவிழக்க வாய்ப்புள்ளது.

தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் இருந்து தென் தமிழகம் வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இவற்றின் தாக்கத்தால் தமிழகத்தில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை 96.8 டிகிரியாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 82.4 டிகிரி ஃபாரன்ஹீட்டாகவும் இருக்கும். தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய குமரி கடல் பகுதிகளில் இன்று முதல் 12-ம் தேதி வரையிலும், தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க பகுதிகள் 11-ம் தேதி வரையிலும் மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும்.
மேலும் அவ்வப்போது மணிக்கு 55 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும். இந்த நாட்களில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.