சென்னை: இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் கூறியிருப்பதாவது:- வடக்கு வங்கக்கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. தமிழகத்தை நோக்கி வீசும் மேற்கு திசை காற்றின் வேகத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, இன்றும் நாளையும் வட தமிழ்நாட்டின் சில இடங்களிலும், தென் தமிழ்நாட்டின் சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது. செப்டம்பர் 4 முதல் 7 வரை தமிழ்நாட்டின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும்.

நகரின் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது. எனவே, மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்.
தமிழ்நாட்டில், நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மதுரை மாவட்டம் கல்லந்திரி, புதுச்சேரியில் 5 செ.மீ., மதுரை மாவட்டம் பெரியபட்டி, சென்னையில் பெரம்பூர், விழுப்புரம் மாவட்டம் ஐஸ் ஹவுஸ் மற்றும் மரக்காணம் ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.