சென்னை: வங்கக்கடலில் இருந்து தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றில் ஈரப்பதம் அதிகரித்துள்ளதாலும், கடலோர பகுதியில் காற்று சுழற்சிக்கு வாய்ப்புள்ளதாலும் வரும் 27-ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான வெப்பநிலை பதிவேடுகளின்படி, ஈரோட்டில் அதிகபட்சமாக 36.2 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக கரூர் பரமத்தியில் 18 டிகிரி செல்சியசும் பதிவானது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 24-ம் தேதி வரை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.