சென்னை: சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூ.2.40 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள காது எலும்பு அறுவை சிகிச்சை பயிற்சி திறன் மையத்தை திறந்து வைத்தார். பின்னர் காது, மூக்கு மற்றும் தொண்டை துறை முன்னாள் இயக்குனர் பேராசிரியர் டாக்டர் முத்துக்குமார் எழுதிய காது எலும்பு அறுவை சிகிச்சை பயிற்சி திறன் கையேட்டை வெளியிட்டனர்.
பின்னர், இளம் பருவத்தினருக்கான ஆலோசனை மற்றும் சிகிச்சை மையத்தை ரூ. 14 லட்சமும், சர்க்கரை நோய் சிகிச்சை சிறப்பு மையம் ரூ. 94 லட்சம். சுகாதார செயலாளர் ப.செந்தில்குமார், தேசிய சுகாதார ஆணைய இயக்குனர் அருண்தம்புராஜ், மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் சங்குமணி, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் சாந்தாராமன், துணை முதல்வர் கவிதா, சர்க்கரை நோய் துறை இயக்குனர் தர்மராஜன், காது, மூக்கு மற்றும் தொண்டை மைய இயக்குனர் சுரேஷ்குமார், பேராசிரியர் பாரதி மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஏற்கனவே காக்ளியர் இம்பிளாண்ட் அறுவை சிகிச்சை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், காது எலும்பு அறுவை சிகிச்சை ஆய்வகம் திறப்பு புதிய முயற்சியாகும். தமிழகத்தில் பணியாற்றும் காது, மூக்கு, தொண்டை நிபுணர்களுக்கு ஆய்வகத்தில் பயிற்சி அளிக்கப்படும். தமிழகத்தில் உள்ள இந்த மருத்துவமனையில் தான் இளம் பருவத்தினருக்கான ஆலோசனை மற்றும் சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
இந்தச் சேவை மையம், பொது மருத்துவம், குழந்தை மருத்துவம், மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவம், மனநலம், ஊட்டச்சத்து மற்றும் தோல் மருத்துவம், மற்றும் பால்வினை நோய்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய பல்துறை அணுகுமுறையை ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை வழங்கும். மது, புகை, போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி மற்றும் பால்வினை நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த மையம் செயல்படும்.
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் நோவோ நோட்ரிக்ஸ் கல்வி அறக்கட்டளை ஆகிய இரு அமைப்புகள் இணைந்து சர்க்கரை நோய்க்கான சிறப்பு மையத்தை சிஎஸ்ஆர் நிதியாக ரூ. 94 லட்சத்தில் மையம் அமைக்கப்படும். தமிழகத்தில் சர்க்கரை நோயின் பாதிப்பு 10.4 சதவீதமாக உள்ளது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் விழிப்புணர்வு மற்றும் கூடுதல் சிகிச்சை அளிக்க பல்வேறு உபகரணங்கள் மற்றும் நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.