தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வதை மத்திய, மாநில அரசுகள் பார்த்துக்கொண்டு காத்திருக்கின்றன என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக்கடலில் நெடுந்தீவு அருகே நடுக்கடலில் சேதமடைந்த விசைப்படகில் இருந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 5 மீனவர்களை சிங்களக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
அவர்களின் மீன்பிடி படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார். மேலும், கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் இந்திய – இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்கவே மாட்டார்கள் என்றும், அவர்கள் ஆந்திராவுக்கு செல்வதாகவும் அவர் கூறினார். பழுதடைந்த படகை சீர்செய்ய முற்பட்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நடுக்கடலில் தத்தளிக்கும் மீனவர்களை மீட்பது கடற்படையினருக்கு வழமையாக இருக்க வேண்டிய நிலையில், அவர்கள் தமிழர்கள் என்பதனால் சிங்களக் கடற்படையினர் அதனை வித்தியாசமாக அணுகுவது குறிப்பிடத்தக்கது. இந்திய-இலங்கை கடல் எல்லையில் மீனவர்கள் கைது செய்யப்படுவதை இந்திய இறையாண்மை மீதான தாக்குதலாகவே கருத வேண்டும்.
மத்திய அரசு முன்னரே நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் போதெல்லாம் மத்திய, மாநில அரசுகளின் அலட்சியப்போக்கால் நிலைமை மோசமாகியுள்ளது. மேலும், மீனவர்கள் பிரச்னையில் மத்திய, மாநில அரசுகள் இனியும் அலட்சியம் காட்டாமல், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் சந்தித்து நிலையான தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.