சென்னை: அனைத்து நியாய விலைக் கடைகளிலும் பருப்பு தடையின்றி வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகரில் உள்ள பெரும்பாலான நியாய விலைக் கடைகளில் நவம்பர் மாதத்துக்கான பருப்பு சப்ளை செய்யப்படவில்லை.
சென்னை மட்டுமின்றி சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களிலும் நியாய விலைக் கடைகளுக்கு துவரம் பருப்பு வழங்கப்படவில்லை. நவ., துவங்கி, 22 நாட்களாகியும், பல நியாய விலைக் கடைகளுக்கு, 200 கிலோ பருப்பு மட்டுமே சப்ளை செய்யப்பட்டுள்ளதாகவும், பெரும்பாலான கடைகளுக்கு, துவரம் பருப்பு சப்ளை செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
மே, ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பருப்பு, பாமாயில் தட்டுப்பாடு ஏற்பட்டது. லோக்சபா தேர்தல் காரணமாக பருப்பு மற்றும் பாமாயில் கொள்முதல் டெண்டர்களை இறுதி செய்ய முடியாததால் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் தாமதம் ஏற்படாது என்றும் அரசு தெரிவித்துள்ளது. ஆனால், அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மூன்று மாதங்களுக்குத் தேவையான பருப்புக்கான கொள்முதல் ஆணை கடந்த செப்டம்பரில் வழங்கப்பட்டதாக தமிழக அரசே கூறிய பிறகும் நவம்பரில் தட்டுப்பாடு ஏன்? நியாய விலைக் கடைகளில் அரிசி, பருப்பு மற்றும் பிற பொருட்களை விற்பனை செய்வதன் நோக்கம் வெளிச்சந்தையில் அவற்றின் விலையைக் கட்டுப்படுத்துவதாகும்.
நியாய விலைக் கடைகளில் மலிவு விலையில் வழங்கப்படும் பருப்பு ஏழை மற்றும் நடுத்தர மக்களின் பசியைப் போக்க மிகவும் முக்கியமானது. இதை உணர்ந்து, அனைத்து நியாய விலைக் கடைகளிலும் நவம்பர் மாதத்துக்கான பருப்பு தடையின்றி, தாமதமின்றி வழங்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.