விழுப்புரத்தில் பாமக கட்சியின் உள் அரசியல் மேலும் தீவிரமடையக் கூடும் வகையில், கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், செயல் தலைவர் அன்புமணியின் பெயர் நீக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கருத்து வேறுபாடுகள் தீவிரமாக இருந்து வந்த நிலையில், இந்த புதிய நடைமுறை இருவரின் மோதலை மேலும் வெளிப்படுத்தியுள்ளது.

அன்புமணி கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, அவரை “செயல் தலைவர்” என மட்டுமே குறிப்பிட ராமதாஸ் முனைந்தார். அதன்பின் இருவரும் தலா தலா அணிகளை கொண்டு செயல்பட தொடங்கினர். இருவரும் பரஸ்பரம் தங்கள் ஆதரவாளர்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக, பாமகவின் நிர்வாகக் குழுவில் இருந்து அன்புமணியை நீக்கி, 21 பேர் கொண்ட புதிய பொறுப்பாளர் பட்டியலை ராமதாஸ் வெளியிட்டார். இதைத் தொடர்ந்து, கட்சித் தரப்பில் “அன்புமணி நீக்கப்படவில்லை” என மறைமுக விளக்கமும் வந்தது.
இந்தச் சூழ்நிலையில், ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வழக்கமாக இடம்பெறும் “செயல் தலைவர் அன்புமணி” என்ற குறிப்பிடல் இல்லாமல் வெளியானது கட்சி நிர்வாகத்தில் கூடுதல் குழப்பத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது இருவரும் முற்றிலும் இரு வேறு தளங்களில் நிலைத்துவிட்டார்கள் என்பதை இச்சம்பவம் உறுதி செய்கிறது.
அதே நேரத்தில், ஓமந்தூரில் நடைபெறவுள்ள பாமகவின் புதிய செயற்குழுக் கூட்டத்தில் அன்புமணி பங்கேற்பாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது. தற்போது நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் பல கட்சிகளில் மும்முரமாக நடந்து கொண்டிருக்க, பாமகவில் உருவாகியுள்ள இந்த உள் பூசல் அக்கட்சியின் எதிர்கால நிலையை சிக்கலில் ஆழ்த்தும் அபாயம் உருவாகியுள்ளது.