ராமேஸ்வரம்: வங்கக் கடலில் பலத்த புயல் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் ராமேஸ்வரம் மோட்டார் படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. 5 நாட்களுக்கு பிறகு நேற்று தடை நீக்கப்பட்டு மீன்பிடித்துறை அனுமதி டோக்கன் வழங்கியது.
நேற்று காலை 479 மோட்டார் படகுகள் மீன்பிடி அனுமதி டோக்கன் பெற்று ஐஸ், டீசல் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை ஏற்றிக்கொண்டு மீன்பிடிக்க கடலுக்கு சென்றன. இதன் காரணமாக மீன்பிடி துறைமுகம் பரபரப்பாக காணப்பட்டது. பாக் ஜலசந்தியில் இரவு முழுவதும் மீன்பிடித்த மீனவர்கள் அனைவரும் இன்று காலை கரை திரும்புகின்றனர்.
இதேபோல் மண்டபம் பகுதியில் இருந்து 300-க்கும் மேற்பட்ட படகுகளில் 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் 5 நாட்களுக்கு பிறகு நேற்று மண்டபம் கோவில்வாடி, வடக்கு கடற்கரை, துறைமுக கடற்கரை பகுதிகளில் இருந்து மீன்பிடிக்க சென்றனர்.