பேராவூரணி : தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திமுக தஞ்சை தெற்கு மாவட்ட மருத்துவ அணி சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் முனைவர் இரா.திருமலைச்சாமி வரவேற்றார். தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்து, ரத்த தான முகாமைத் துவக்கி வைத்தனர். மேலும், 5 கர்ப்பிணி பெண்களுக்கு தங்கள் வீடுகளிலேயே சர்க்கரை பரிசோதனை செய்யும் வகையில் கருவிகளை இலவசமாக வழங்கினர்.
முகாமில் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பேசியதாவது, உலகில் இருக்கக்கூடிய மொத்த நாடுகள் 205, இவற்றில் ஏறத்தாழ 105 நாடுகளில் உயர் பதவிகளில் இருப்பவர்கள் தமிழர்கள். அதற்கு பேரறிஞர் அண்ணா உருவாக்கிய இருமொழிக் கொள்கைதான் காரணம். தாய் மொழியை பாதுகாக்க கூடிய கடமை நம் அனைவருக்கும் உண்டு.
நம் உயிரினும் மேலான தாய் மொழிக்காக உயிரை தரக்கூடியவர்கள் தமிழர்கள், மும்மொழிக் கொள்கையை எதிர்த்து போராடக்கூடிய நமது முதலமைச்சர் அவர்களுக்கு நாம் அனைவரும் ஆதரவாக இருக்க வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றைக்கு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி செயல்படுத்தி வருகிறார் அந்த வகையில் கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவத்தை முதலமைச்சர் வழங்கி வருகிறார்.
புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், தமிழ் புதல்வன்
ஆகிய திட்டங்கள் நம்மை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும். இந்தியாவில் யாரும் நினைக்காத திட்டங்களை முதலமைச்சர் செயல் படுத்தி வருகிறார். கல்வி ஒன்று தான் அழியாத சொத்து, கல்வி ஒன்று தான் உங்களை உயர்த்தும் என முதலமைசர் தெரிவித்துள்ளார்” என்றார்
நிகழ்ச்சியில் திமுக தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளர் பழனிவேல், மாவட்ட அவைத் தலைவர் சுப.சேகர், திமுக ஒன்றியச் செயலாளர்கள் மு.கி.முத்துமாணிக்கம், வை.ரவிச்சந்திரன், கோ.இளங்கோவன், பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத், மாநில மருத்துவ அணி துணைச் செயலாளர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, தஞ்சை தெற்கு மாவட்ட மருத்துவமனை அமைப்பாளர் டாக்டர் வி. சௌந்தர்ராஜன், மாவட்ட மருத்துவர் அணி தலைவர் குணசேகரன், பட்டுக்கோட்டை திமுக நகரச் செயலாளர் எஸ்.ஆர்.என்.செந்தில்குமார், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் அலிவலம் அ.மூர்த்தி, சுவாதி காமராஜ், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.