புழல்: மாதவரம் மண்டலம் 23-வது வார்டுக்கு உட்பட்ட சக்திவேல் நகர் மெயின் ரோட்டில் ரேஷன் கடை உள்ளது. இந்த ரேஷன் கடையில் புழல் சிவராஜ் தெரு, காந்தி தெரு, திரு.வி.க.தெரு, சக்திவேல் நகர், பாலாஜி நகர், கிருஷ்ணா நகர், மேக்ரோ மார்வேல் நகர், மெர்சி நகர் உள்ளிட்ட நகர் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு தேவையான உணவு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
தற்போது, இந்த ரேஷன் கடையில், 2,200-க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் உள்ளன. இதில், 2 கி.மீ., தொலைவில் உள்ள மகாலட்சுமி நகர் பகுதி ரேஷன் கடைக்கு, 500-க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் மாற்றப்பட்டுள்ளன. இதனால் புழல் சிவராஜ் மெயின் ரோடு மற்றும் சிவராஜ் 1-வது தெரு, 2-வது தெரு, 3-வது தெரு ஆகிய இடங்களில் உள்ள ரேஷன் கார்டுகள், 2 கி.மீ., தொலைவில் உள்ள ரேஷன் கடைக்கு மாற்றப்பட்டுள்ளதால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர்.

பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சார்பில் புழல் அனைத்து சமூக நல சங்க கவுரவ தலைவர் ராஜேந்திரன், ஆவடி உணவு வழங்கல் ஆணையர் இளவரசன், செங்குன்றத்தில் உள்ள சைதாப்பேட்டை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க பொது மேலாளர் நீதிராஜன் ஆகியோரை நேற்று நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
அதில், சிவராஜ் மெயின் ரோடு மற்றும் சிவராஜ் 1-வது தெரு, 2வது தெரு, 3-வது தெரு, சக்திவேல் நகர் மெயின் ரோட்டில் ரேஷன் கடை அருகே உள்ளதால், அப்பகுதி மக்களுக்கு மீண்டும் பொருட்கள் வாங்கவும், மகாலட்சுமி நகர் அருகே உள்ள சக்திவேல் நகர் பகுதி மக்கள் மகாலட்சுமி நகர் பகுதியில் பொருட்கள் வாங்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.