கடலூர்: பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத் தலைநகரங்களில் ரேஷன் கடை ஊழியர்கள் வரும் 5-ம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்க சிறப்புத் தலைவர் கு.பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
கடலூரில் நேற்று (செப்டம்பர் 3) செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:- தமிழகத்தில் அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களில் பொது விநியோகத் திட்டமும் ஒன்று.
இந்த திட்டத்தில் பல குறைபாடுகள் உள்ளன. இவற்றை களைய பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். குறிப்பாக, தரமான பொருட்களை சரியான எடையில் பேக் செய்ய வேண்டும். அனைத்து அத்தியாவசிய பொருட்களுக்கும் 100 சதவீதம் ஒதுக்க வேண்டும்.
வெளிமாவட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க கூடுதலாக 10 சதவீதம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். அனைத்து அத்தியாவசிய பொருட்களும் ஒரே நேரத்தில் வழங்கப்பட வேண்டும். கடந்த 3 மாதங்களாக பாமாயில், பருப்பு வரத்து பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு நடமாடும் பணியாளர்களை நியமித்து, எடை அளவுகள் வழங்க வேண்டும். நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள்களை இறக்குவதற்குக் கட்டாயக் கட்டணம் வசூலிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
எப்.பி.எஸ்., ஆப் மூலம் ஆய்வு செய்வதை கைவிட வேண்டும், நியாய விலைக்கடைகளில் நேரடி ஆய்வு நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 5-ம் தேதி, மாநிலம் தழுவிய ஒருநாள் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம், மாவட்ட தலைநகரங்களில் நடத்த முடிவு செய்துள்ளோம்,” என்றார்.
அப்போது சங்கத்தின் மாவட்ட செயலாளர் தேவராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.