புதுடெல்லி: ரயில்வே துறையில் பணியாளர்கள் பற்றாக்குறையால், 25,000 காலி பணியிடங்களை நிரப்ப ரயில்வே வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு ஏற்கனவே ரயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்ற 65 வயதுக்குட்பட்டவர்களை மீண்டும் நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி 65 வயதுக்குட்பட்ட ரயில்வே ஓய்வு பெற்றவர்கள் கண்காணிப்பாளர் முதல் டிராக்மேன் வரை பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். அவர்களின் கடந்த ஐந்தாண்டு பணி நடத்தை பகுப்பாய்வு செய்யப்பட்டு, அவர்களின் உடற்தகுதி அடிப்படையில் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அந்த பணியில் 2 ஆண்டுகள் வரை தற்காலிக ஊழியர்களாக பணியாற்றலாம்.
அவர்களின் செயல்திறனைப் பொறுத்து பணி நீட்டிப்பு வழங்கப்படும். மீண்டும் நியமனம் செய்யப்படுபவர்களுக்கு அவர்களின் கடைசி மாத ஊதியம் அடிப்படை ஓய்வூதியத்தை கழித்தல் மட்டுமே வழங்கப்படும். பயணப்படி வழங்கப்படும்.
ஆனால் ஊதிய உயர்வு வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற ஊழியர்களை மீண்டும் பணி நியமனம் செய்யும் பணிகளை மண்டல மேலாளர்கள் மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக ரயில் விபத்துகள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன.
இந்த விபத்துகளுக்கு ஊழியர் பற்றாக்குறையும் ஒரு காரணமாக கூறப்படும் நிலையில், அனைத்து மண்டலங்களிலும் தேவையான பணியிடங்களுக்கு ஆட்களை நியமிக்கும் பணியை ரயில்வே துறை தொடங்கியுள்ளது. இளைஞர்கள் வேலையின்றி திணறி வரும் நிலையில், ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணியில் அமர்த்துவது மோசமான நடவடிக்கை என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.