சென்னை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் யாத்ரீகர்களுக்கான ஒதுக்கீட்டை குறைப்பது தொடர்பாக சவுதி அரசுடன் பேசி தீர்வு காண வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து மு.க. ஸ்டாலின் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளதாவது:- “இந்தியாவில் இருந்து தனியார் நிறுவனங்கள் மூலம் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் யாத்ரீகர்களுக்கான ஒதுக்கீட்டை திடீரென குறைத்துள்ளதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.
சவுதி அரசுடன் பேசி பிரச்னையை உடனடியாக தீர்க்க வேண்டும்” என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், மனிதநேய சமுதாய கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்த ஆண்டு, இந்தியாவில் இருந்து, தனியார் ஹஜ் சேவை நிறுவனங்கள் மூலம், 52 ஆயிரம் பேர், ஹஜ் பயணம் மேற்கொள்ள, சவுதி அரேபிய அரசு அனுமதி அளித்திருந்தது. ஹஜ் கட்டணம் செலுத்த, மார்ச், 25-ம் தேதி வரை, சவுதி அரசு கெடு விதித்துள்ளதாக தெரிகிறது.

புனித ஹஜ் யாத்திரைக்காக பயணிகளிடம் இருந்து தனியார் ஹஜ் சேவை நிறுவனங்கள் மூலம் வசூலிக்கப்படும் தொகை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மத்திய சிறுபான்மையினர் விவகார அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், மத்திய சிறுபான்மையினர் விவகார அமைச்சக அதிகாரிகளின் அலட்சியத்தால், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அந்த பெரும் தொகை சவுதி அரசுக்கு அனுப்பப்படவில்லை.
இதன் காரணமாக இந்தியாவில் இருந்து ஹஜ் யாத்திரை செல்லவிருந்த 52,000 யாத்ரீகர்களின் விசாவை சவுதி அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதன் மூலம், இந்த ஆண்டு ஹஜ் யாத்திரை மேற்கொள்ள வாய்ப்பளிக்காமல் மத்திய அரசு ஏமாற்றியுள்ளது,” என்றார்.