சென்னை: சென்னை தாம்பரம் யார்டில் சிக்னல் மேம்பாடு உள்ளிட்ட வளர்ச்சி பணிகள் காரணமாக கடந்த ஜூலை 23ம் தேதி முதல் விரைவு, மின்சார ரயில் சேவையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன.அதன்படி 63 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. 27 எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 14ம் தேதி வரை அறிவிக்கப்பட்ட இந்த மாற்றம், பின்னர் 18ம் தேதி வரை (நேற்று) நீட்டிக்கப்பட்டது.
சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மாநகர பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட்டாலும், பஸ்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனிடையே சிக்னல் மேம்பாடு, புதிய சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் இரவு பகலாக தொடர்ந்து நடைபெற்று வந்தது. ஆகஸ்ட் 18ம் தேதி மதியம் 12 மணிக்குள் பணிகள் முடிந்து ரயில் சேவை சீரமைக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் கடந்த வாரம் அறிவித்தது. அதன்படி நேற்று காலை தாம்பரம் யார்டில் அனைத்து வளர்ச்சி பணிகளும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதையடுத்து, காலை 11.35 மணி முதல் மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயங்கத் தொடங்கின.
ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: தாம்பரம் யார்டில் சீரமைப்பு பணிகளை முடித்து, உள்கட்டமைப்பு மேம்பாட்டில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளோம். பணிகள் நிறைவடைந்ததையடுத்து, சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் வழக்கமான ரயில் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி ஞாயிற்றுக்கிழமை 18ஆம் தேதி (நேற்று) புறநகர் மின்சார ரயில் சேவை இயக்கப்பட்டது. 19ம் தேதி (இன்று) முதல் வழக்கமான அட்டவணைப்படி மின்சார ரயில்கள் இயக்கப்படும். இதேபோல், எக்ஸ்பிரஸ் ரயில்களும் திட்டமிட்டபடி இயக்கப்படுகின்றன.