நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ரஜதகிரீஸ்வரர் கோவிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் இன்று காலை விமர்சையாக நடைபெற்றது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த இந்த விழா, பக்தர்களிடையே பெரும் ஆனந்தத்தை ஏற்படுத்தியது. விழாவை சிறப்பிக்கும் வகையில் வேளாங்கண்ணி முகமதியர் தெருவை சேர்ந்த முஸ்லிம்கள், மேளதாளம் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு சீர்வரிசை எடுத்து வந்து அனைவரையும் கவர்ந்தனர்.
அவர்கள் பள்ளிவாசலில் இருந்து புறப்பட்டு, மஞ்சள், குங்குமம், தேங்காய், வாழைப்பழம், பட்டுப்புடவை உள்ளிட்ட பல்வேறு வகையான மங்கள பொருட்களை சீர்வரிசையாக கொண்டு வந்தனர். இந்த நிகழ்வில் கோவில் நிர்வாகிகள் முஸ்லிம் சமூகத்தினரை இன்முகத்துடன் வரவேற்று, மாலை மற்றும் சால்வைகளை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனால் மத நல்லிணக்கத்தின் ஒற்றுமை வெளிப்பட்டது.
பின்னர் யாகசாலை பூஜைக்குத் தேவையான நவதானியம் உள்ளிட்ட 16 வகையான ஹோமப் பொருட்கள் முஸ்லிம் சமூகத்தினரால் வழங்கப்பட்டன. இந்த அர்ப்பணிப்பு, கோவில் நிர்வாகிகளையும், பக்தர்களையும் நெகிழ்ச்சியடையச் செய்தது. மத வேறுபாடுகளை மீறி, நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்திய இந்த செயல், வேளாங்கண்ணி நகரின் பெருமையை மேலும் உயர்த்தியது.
மத நல்லிணக்கத்திற்கான எடுத்துக்காட்டாகவே இந்த நிகழ்வு பார்க்கப்படுகிறது. ஹிந்து, முஸ்லிம் சமூகங்கள் இணைந்து கொண்டாடிய இந்நிகழ்வு, ஒற்றுமையின் பாலமாக அமைந்துள்ளது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் மட்டுமல்லாது, பொதுமக்களிடையே கூட இதுவொரு மறக்க முடியாத தருணமாக அமைந்தது.