தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு ஏற்கெனவே இயங்கி வந்த இடத்தை மீண்டும் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவினை வழங்கினர்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார். கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா, கல்வி உதவித் தொகை, முதியோர் உதவித் தொகை, புதிய குடும்ப அட்டை கோருதல் உள்ளிட்ட 571 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். இந்த மனுக்கள் மீது அந்தந்த துறை அதிகாரிகள் விசாரித்து உரிய தீர்வு காண ஆட்சியர் உத்தரவிட்டார்.
அப்போது, அதிராம்பட்டினம் நகராட்சியிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து ஆட்சியரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: அதிராம்பட்டினம் பிள்ளையார்கோயில் தெருவில், சிறுபான்மையின மக்கள் கல்வி பயில ஏதுவாக, தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி 1975ம் ஆண்டு முதல் பொது இடத்தில் செயல்பட்டு வந்தது.
இந்த பள்ளியை நகராட்சி ஆணையர் அதிகார துஷ்பிரயோகம் செய்து, பள்ளியை பூட்டி கடந்தாண்டு சீல் வைத்ததால், பள்ளி வேறு இடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது.
பள்ளி செயல்பட்ட அதே இடத்தில் மீண்டும் பள்ளிக்கூடம் செயல்பட அதற்கான இடத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பல்வேறு கட்ட போராட்டங்கள் தொடர்ந்து செய்யப்பட்டது. ஆனால், ஒருசிலர் பொது இடத்தை ஆக்கிரமித்து வணிக பயன்பாட்டுக்கு மாற்ற திட்டமிட்டுள்ளனர். எனவே, பெண்கள் கல்வி பயில அந்த இடத்தை மீண்டும் பள்ளி நிர்வாகத்துக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளனர்.