மதுரை: திருப்பரங்குன்றம் இஸ்லாமிய தர்கா பிரச்னையை அரசியலாக்க முயற்சிப்பவர்களை தனிமைப்படுத்த வேண்டும் என்றும், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மணப்பாறை எம்எல்ஏ அப்துல் சமது வலியுறுத்தியுள்ளார். தடையை மீறி திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவில் கந்தூரி விழா நடத்தச் சென்ற ஐக்கிய ஜமாத் உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்பினரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதையொட்டி மணப்பாறை எம்எல்ஏ மனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் அப்துல் சமது திருப்பரங்குன்றம் வந்தார்.
தர்கா பகுதியில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:- திருப்பரங்குன்றம் மலையில் கந்தூரி விழா நடத்த அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர சபாநாயகரிடம் மனு அளித்தேன். இதைத்தொடர்ந்து சட்டசபை விவாதத்தின் போது விவாதிக்கப்பட்டது. தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினேன்.
மலையில் நான் நடத்திய ஆய்வின்படி, 60 முதல் 70 ஆண்டுகளுக்கு முன், தர்காவில் ஆடு, கோழி பலியிட்டு உணவு சமைத்து பரிமாறப்பட்டது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கந்தூரி விழா ஆதாரம் பெறப்பட்டுள்ளது. 1920-ல் நீதிமன்ற தீர்ப்பில் சிக்கந்தர் மலையின் ஆதாரம் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் தர்காவில் வழிபாடு நடத்தி வரும் நிலையில், சிலர் திட்டமிட்டு தவறான தகவல்களை பரப்பி பிரிவினையை ஏற்படுத்தி வருகின்றனர்.
எல்லா மதத்தினருக்கும் வழிபட உரிமை உண்டு. இதை சர்ச்சையாக்கி அரசியல் செய்ய முயல்பவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தர்காவில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். அதிமுக ஆட்சியில் தர்கா செல்லும் சாலையை சீரமைக்க ரூ. 5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அந்த நிதி வேறு திட்டத்திற்கு மாற்றப்பட்டது. இதுகுறித்து தமிழக அரசுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.