சுங்கச்சாவடிகளில் ஆம்னி பஸ்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சங்கத் தலைவர் அ.அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கொல்லிமலையில் அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில், ஆம்னி பேருந்துகள் போன்ற பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்கு இந்தியா முழுவதும் உள்ள 1,228 சுங்கச்சாவடிகளில் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

தமிழகத்தில் ஆம்னி பஸ்களை ஒரே நாளில் பதிவு செய்து இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் அனுமதிக்கும் அகில இந்திய சுற்றுலா அனுமதி பேருந்துகளை தமிழகத்திலும் அனுமதிக்க வேண்டும். ஆம்னி பஸ்களுக்கு தேவையற்ற அபராதம் விதிப்பதை முற்றிலும் நிறுத்த வேண்டும். அனைத்து போக்குவரத்து துறை சேவைகளையும் ஆன்லைனில் வழங்க வழி ஏற்படுத்த வேண்டும்.
ஓட்டுநர்கள் போக்குவரத்து விதிகளை மீறினால் ஓட்டுநர் உரிமத்திற்கு மட்டும் அபராதம் விதிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.