சென்னை: இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்., 31-ல் (வியாழன்) கொண்டாடப்படுகிறது. ரயில் டிக்கெட்டுகளுக்கு 120 நாட்களுக்கு முன்பதிவு செய்யும் வசதி உள்ளது.
அதன்படி தீபாவளி பண்டிகைக்கான டிக்கெட் முன்பதிவு ஜூலை 1 மற்றும் 2-ம் தேதிகளில் நடைபெற்றது. நெல்லை, கன்னியாகுமரி, பாண்டியன், பொதிகை, முத்துநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு புறப்படும் முக்கிய ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு சில நிமிடங்களில் முடிந்து விட்டது.
குறிப்பாக, பாண்டியன், நெல்லை, பொதிகை ரயில்களுக்கான காத்திருப்புப் பட்டியலும் முடிந்து “ரெக்ரெட்” காட்டியது. இதேபோல், மேற்கு மாவட்டங்களுக்கு செல்லும் சேரன், நீலகிரி ரயில்களிலும், பகலில் இயக்கப்படும் வைகை, பல்லவன் விரைவு ரயில்களிலும் டிக்கெட் முன்பதிவு முடிந்து காத்திருப்போர் எண்ணிக்கை நீண்டு கொண்டே செல்கிறது.
ரயில் டிக்கெட் முன்பதிவை பொறுத்த வரையில் 80 சதவீதத்துக்கும் மேல் ஆன்லைனிலும், மீதமுள்ள டிக்கெட் முன்பதிவு கவுண்டர்கள் மூலமும் நடைபெறுகிறது.
குறிப்பாக, முன்பதிவு டிக்கெட் பெற, ரயில் நிலையத்தில் உள்ள கவுன்டர்களில் நீண்ட நேரம் காத்திருந்த பயணிகள், டிக்கெட் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்தனர். தற்போது சிறப்பு ரயில்களுக்காக காத்திருக்கின்றனர்.
தென் மாவட்டத்தை சேர்ந்த பயணிகள் சிலர் கூறியதாவது:- சென்னையில் வசிக்கும் நாங்கள், தீபாவளி, பொங்கல் பண்டிகையின் போது சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். எனவே, தீபாவளிக்கு வீட்டுக்குச் செல்லலாம் என்று ரயில் நிலையத்தில் உள்ள கவுன்டர்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய முயற்சித்தோம்.
ஆனால் சில நிமிடங்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்து காத்திருப்போர் பட்டியல் வந்தது. இதனால் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்துள்ளோம். எனவே, சிறப்பு ரயில்களை எப்போது அறிவிப்பார்கள் என்று காத்திருக்கிறோம்.
கடந்த சில ஆண்டுகளாக, திருவிழா சிறப்பு ரயில்கள் கடைசி கட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இதனால் பயணத்தை திட்டமிட முடியாத நிலை உள்ளது. எனவே, இந்த ஆண்டு முன்னதாக சிறப்பு ரயில்களை அறிவிக்க வேண்டும். அப்போதுதான் டிக்கெட் முன்பதிவு செய்ய வசதியாக இருக்கும் என்றனர்.
தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ”தீபாவளிக்கு சிறப்பு ரயில்களை இயக்குவது குறித்து ஆலோசித்து வருகிறோம். பயணிகளின் தேவைக்கேற்ப சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்படும்.
எந்தெந்த வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும். காத்திருப்போர் பட்டியல் அதிகமாக உள்ள வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை இயக்குவது, இருக்கும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் சேர்ப்பது போன்ற நடவடிக்கைகளையும் எடுக்க உள்ளோம்,” என்றார்.