
அரூர்: தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் மரவள்ளிக்கிழங்கு நன்செய் மற்றும் புன்செய் பயிராக பயிரிடப்படுகிறது. ஆத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி, சேலத்தில் மரவள்ளிக்கிழங்குகளில் இருந்து ஸ்டார்ச் எடுக்க ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
இந்த மாவில் இருந்து சேமியா மற்றும் ஜவ்வரிசி தயாரிக்கப்படுகிறது. பின்னர் பெறப்படும் கழிவுகள் காகித ஆலைகளில் காகித உற்பத்திக்காகவும், ஜவுளித் தொழிலில் துணிகளுக்கு இறுதித் தொடுதல் கொடுக்கவும், பசை தயாரிப்பிலும், மருத்துவத் துறையிலும் பயன்படுத்தப்படுகின்றன. இதற்காக சேலம், ஆத்தூர், தர்மபுரி மாவட்டங்களில் உள்ள செகோ தொழிற்சாலைகளில் இருந்து கிழங்கு கழிவுகள் லாரிகள் மூலம் அரூர் வழியாக கொண்டு செல்லப்படுகிறது.

இந்த கழிவுகள் பாதுகாப்பற்ற முறையில் லாரிகளில் கொண்டு செல்லப்படுவதால், துர்நாற்றம் வீசுவதுடன், மாவு சாலையில் கொட்டுவதால், இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் வழுக்கி விழும் அபாயம் உள்ளது. எனவே, மரவள்ளிக்கிழங்கு, உருளைக்கிழங்கு கழிவுகளை பாதுகாப்பாக கொண்டு செல்ல வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.