திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிப்புதூரைச் சேர்ந்த 27 வயது ரிதன்யா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. கடந்த ஏப்ரல் 11 அன்று ரிதன்யாவுக்கும் கவின்குமாருக்கும் திருமணம் நடைபெற்றது. ஜூன் 28 அன்று கோயிலுக்குச் செல்கிறேன் என கூறி புறப்பட்ட ரிதன்யா, காருக்குள்ளேயே விஷம் குடித்து உயிரிழந்தார். தற்கொலைக்கு முன், தனது தந்தைக்கு வாட்ஸ்அப்பில் 8 ஆடியோ மெசேஜ்களை அனுப்பியிருந்தார். அதில் 500 பவுன் நகை கேட்கப்பட்டதையும், கணவர் மற்றும் மாமியார், மாமனார் சித்ரவதை செய்ததாகவும் அழுதபடி கூறியிருந்தார்.

திருமணத்தில் ஏற்கனவே 300 பவுன் நகை, சொகுசு கார் மற்றும் ரூ.2.25 கோடி செலவில் திருமணம் நடந்ததாகவும், மீதமுள்ள நகையை கேட்டுக் கணவர் தொடர்ந்து தொல்லை கொடுத்ததாகவும் புகார் எழுந்துள்ளது. இந்த வழக்கில் கணவர் கவின்குமார் மற்றும் மாமனார் ஈஸ்வரமூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளனர். மாமியார் சித்ராதேவி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருப்பதால் அவர் கைது செய்யப்படவில்லை.
வழக்கறிஞர் பிரியதர்ஷினி இந்த விவகாரம் குறித்து பேசியபோது, ரிதன்யா தொடர்ந்து உடல் மற்றும் மன சித்ரவதை எதிர்கொண்டதாகவும், கவின்குமாரால் பாலியல் தொல்லையும் அடைந்ததாகவும் கூறினார். ரிதன்யா காவல்துறையில் புகார் அளித்திருந்தால் தற்கொலை தவிர்க்கப்படியிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். ரிதன்யா தற்கொலை செய்யத் திட்டமிட்டதாக முதலில் இல்லை, கோயிலுக்குப் போகும் எண்ணத்தில் இருந்ததாகவும், கணவரின் கடும் திட்டால் மன அழுத்தத்தில் தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறினார்.