தேனி: வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து, 2025 மார்ச் 31 தேதிக்குள் குறைந்தபட்சம் ஐந்தாண்டுகளாக வேலை இல்லாமல் காத்திருப்பவர்களுக்கு தமிழக அரசு ஆண்டுக்கு ரூ.7200 வரை உதவித்தொகை வழங்குகிறது. இந்தத் திட்டம் மூலம் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் நலனடைய திட்டமிடப்பட்டுள்ளது.
தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக வேலைவாய்ப்பின்றி உள்ளவர்களுக்கு காலாண்டு அடிப்படையில் உதவித்தொகை வழங்கப்படும். உதவித்தொகை பெற விண்ணப்பதாரர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். கல்வித்தகுதியின் அடிப்படையில், எஸ்.எஸ்.எல்.சி தோல்வியுற்றவர்களுக்கு ரூ.600, தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.900, மேல்நிலை தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.1200, பட்டதாரிகளுக்கு ரூ.1800 என மூன்றாண்டுகள் வரை தொகை வழங்கப்படும்.
மாற்றுத்திறனாளிகள் இந்த உதவித்தொகையை பத்து ஆண்டுகளுக்கு வரை பெறலாம். ஒரு வருட பதிவு இருந்தாலே போதுமானது. இவர்கள் ரூ.600 முதல் ரூ.1000 வரை கல்வித் தகுதியைப் பொறுத்து உதவித்தொகையை பெற முடியும்.
அத்துடன், பொறியியல், மருத்துவம், விவசாயம், கால்நடை மருத்துவம், சட்டம் போன்ற தொழிற்கல்வி பட்டதாரிகள் இந்த உதவித் திட்டத்திலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். தகுதியானவர்கள் www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் இலவசமாக விண்ணப்பம் பெறலாம்.
தகுதிகள் உள்ளவர்கள் கல்வி சான்றுகள் மற்றும் வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடன் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் ஆண்டு முழுவதும் அனைத்து வேலை நாட்களிலும் பெற முடியும். இந்த உதவித்தொகையை பெற்றாலும், அலுவலக பதிவு ரத்து செய்யப்படாது. வேலைவாய்ப்பு பரிந்துரையிலும் எந்தவித தடையும் இருக்காது என கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்தார்.