தஞ்சாவூர்: அரசு கால்நடைப்பண்ணையில் சாக்குப்பைகள் ஏலம் 15ம் தேதி நடக்கிறது என்று தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தஞ்சை மாவட்டம் நடுவூரில் உள்ள அரசு கால்நடைப்பண்ணையில் 2023-24-ம் ஆண்டில் சேகரிக்கப்பட்ட 4466 எண்ணிக்கையிலான காலி தீவன பாலித்தீன் சாக்குப்பைகள் வருகிற 15ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு பண்ணை துணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் பொது ஏலமிடப்படுகிறது. சாக்குப்பை ஒன்று அடிப்படை விலை ரூ.4-ம், கிழிந்த நிலையில் உள்ள சாக்குப்பை ரூ.1-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏலம் அரசு விதிமுறைகளின்படி பகிரங்கமாக அலுவலக வளாகத்தில் நடத்தப்படும்.
ஏலத்தில் கலந்து கொள்ளும் நபர்கள் சாக்கு கொள்முதல் செய்யும் நிறுவனங்கள், கடைகள், தனித்தனியாக ஏலத்திற்கான முன்வைப்புத்தொகை ரூ.1,000, கால்நடைத்துறை துணை இயக்குனர், கால்நடை பண்ணை, நடுவூர் என்ற பெயரில் வங்கிவரைவோலையாக ஒரத்தநாட்டில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மாற்றத்தக்க வையில் சமர்ப்பித்தல் வேண்டும். ஒரு நபரிடம் இருந்து ஒரு வங்கி வரைவோலை மட்டுமே பெறப்படும்.
வரைவோலையுடன் ஆதார் அடையாள அட்டை, ஜெராக்ஸ் பெறப்பட்டு உரிய பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு ஏலத்தில் கலந்து கொள்வதற்கான அனுமதி டோக்கன் வழங்கப்படும். முன்வைப்புத்தொகையாக செலுத்தப்படும் வங்கி வரைவோலைகள் அனைத்தும் வருகிற 8-ந்தேதி முதல் 14-ந்தேதி வரையுள்ள காலத்தில் பெறப்பட்ட வங்கி வரைவோலையாக இருக்க வேண்டும். வரைவோலை துணை இயக்குனர் அலுவலகததில் 14ம் தேதி காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை பெறப்படும். ஏல முன்புவைப்புத்தொகை செலுத்துபவர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.
மற்றவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஏலம் முடிந்தவுடன் அதிக தொகைக்கு ஏலம் கோரியவரை தவிர இதர ஏலதாரர்களின் வரைவோலைகள் திருப்பி வழங்கப்படும். ஏலம் முடிந்தவுடன் அதற்கான தொகையை ஏலதாரர்செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.