சென்னை: தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் 48-வது புத்தகக் கண்காட்சி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஜனவரி 12-ம் தேதி வரை மொத்தம் 17 நாட்கள் நடைபெறும் இந்தப் புத்தகக் கண்காட்சி விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். வார நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும்.
இதற்கான நுழைவுக் கட்டணம் பொதுமக்களுக்கு ₹10 மட்டுமே. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அனுமதி இலவசம். மொத்தம் 900 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் தினகரன் – சூரியன் பதிப்பகத்திற்கு இரண்டு அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த அரங்குகள் 329 மற்றும் 330 எண்களில் அமைந்துள்ளன. தற்போது அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் நேற்று பள்ளிகள் புத்தக கண்காட்சிக்கு மாணவர்களை அழைத்து வந்தனர்.
மாணவர் வருகையை அதிகரிக்கவும், படிக்கும் திறனை ஊக்குவிக்கவும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு, பபாசி சார்பில், 10 லட்சம் இலவச நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டது. புத்தகக் கண்காட்சிக்கு மாணவர்களைக் கவரும் வகையில் பொம்மைகள், தள்ளுபடிகள் எனப் பல விஷயங்களை பதிப்பாளர்கள் செய்துள்ளனர். குறிப்பாக, 10 சதவீத தள்ளுபடியில் புத்தகங்கள் விற்பனை செய்யப்படுவதால், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இன்று சனிக்கிழமை என்பதால் பள்ளி மாணவர்களை கூடுதலாக அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அறிவு வளர்ச்சி என்ற தலைப்பில் எஸ்தர் ஜெகதீஸ்வரியும், வாசிப்பால் எழுப்பப்பட்ட வரலாறு என்ற தலைப்பில் கிருங்கை சேதுபதியும், தமிழ் எழுத்தில் விவசாயி வாழ்வு என்ற தலைப்பில் மகேந்திரனும் பேச உள்ளனர்.