புதுடெல்லி: விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நுகர்வோருக்கு மானிய விலையில் கோதுமை மற்றும் அரிசி விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய அரசு நேற்று இரண்டாம் கட்டமாக அறிமுகப்படுத்தியது.
மத்திய உணவுத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, டில்லியில் நேற்று இத்திட்டத்தை துவக்கி வைத்து பேசியதாவது:- பாரத் பிராண்ட் என்ற பெயரில், மானிய விலையில் உணவு பொருட்களை விற்பனை செய்யும் திட்டம், 2023 அக்டோபரில் துவங்கி, 2024 ஜூன் வரை செயல்படுத்தப்படும்.
இதை தொடர்ந்து, இரண்டாம் கட்ட திட்டம் இப்போது தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி, கோதுமை மா ஒரு கிலோ 30 ரூபாவாகவும், அரிசி கிலோ 34 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளது.
இவை 5 மற்றும் 10 கிலோ பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படும். விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தேவைப்பட்டால் குறைந்த எடை கொண்ட அரிசி மற்றும் கோதுமை பொட்டலங்களும் அறிமுகப்படுத்தப்படும். தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (என்சிசிஎப்), நபேட், கேந்ரிய பந்தர் மற்றும் இ–காமர்ஸ் தளங்களில் விற்பனை நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.