சென்னை ; கோடை வெயிலில் தாக்கம் எதிரொலியால் டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை அதிகரித்துள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது.
பனி, மழை, வெயில் என எந்த பருவநிலை நிலவினாலும் உற்சாகமுடன் இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் மதுப்பிரியர்கள். உணவுப் பிரியர்கள் பருவகால மாற்றத்துக்கு ஏற்ப எப்படி விதவிதமான உணவு வகைகளை சாப்பிடுகிறார்களோ? அதேபோல மதுப்பிரியர்களும் அந்தந்த பருவநிலைக்கு ஏற்ப மதுபானங்களை வாங்கி குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.
இதில், கொளுத்தும் கோடை வெயிலுக்கு இதமாக புத்துணர்வை கொடுக்கும் ‘பீர்’ வகைகள் தான் மதுப்பிரியர்களின் தேர்வாக உள்ளது. அதனாலேயே ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலம் தொடங்கியதுமே மற்ற மதுபான வகைகளை வாங்கி பருகுவதை குறைத்துவிட்டு ‘பீர்’ வகைகளை அதிக அளவில் வாங்கி பருகுகின்றனர்.
அதிலும் குளிரூட்டப்பட்ட ‘பீர்’ வகைகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால் கோடை காலத்தில் ‘பீர்’ விற்பனை பலமடங்கு அதிகரிக்கும். அதன்படி, கடந்த மார்ச் மாத தொடக்கம் வரை ‘பீர்’ வகைகளின் விற்பனை சற்று குறைவாகவே இருந்தது. மார்ச் மாத இறுதியில் இருந்து ‘பீர்’ விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.
வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் இளநீர், தர்ப்பூசணி, நுங்கு மற்றும் குளிர்பானங்களை தேடிச்சென்றனர். ஆனால் மதுப்பிரியர்களோ ‘பீர்’ வகைகளை அதிக அளவில் வாங்கி பருக தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக டாஸ்மாக் கடைகளில் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 10 ஆயிரத்துக்கு மேல் ‘பீர்’ வகைகள் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.