சென்னை: உமிழ்நீர் என்றதும் முகம் சுளிப்பவர்களே அதிகம். ரத்தம், வியர்வை, கண்ணீர் போன்ற உடல் திரவங்களுக்கு இருக்கும் உயர்வு நவிற்சியும் சென்டிமெண்ட்டும் ஏனோ உமிழ்நீருக்கு இல்லை. ஆனால், உமிழ் நீர் மனித உடலில் செய்யும் வேலை மகத்தானது.
உமிழ் நீரில் வைட்டமின்கள், மினரல்கள், ஹார்மோன் சுரப்புகள், என்சைம்கள், அமிலங்கள், நல்ல பாக்டீரியா உட்பட என்னென்ன உணவுப்பொருட்கள் எல்லாம் நாம் சாப்பிட்டோமோ அதன் அத்தனை வேதிப் பண்புகளும் இருக்கும்.
ம்யூகின்ஸ் (Mucins) எனப்படும் உயவுச்சுரப்புத்தான் உமிழ்நீரில் பிரதானமாக உள்ளது. புரோட்டின் மூலக்கூறுகளால் ஆன இது, நுண்ணிய மைரோஸ்கோபிக் பால்பேரிங்களைப் போல செயல்படுகின்றன. உணவை மெல்லவும், விழுங்கவும், பேசவும், பற்களை ஈறுகளோடு வலுவாகப் பிணைக்கவும், பற்குழி, பற்சொத்தை போன்றவற்றில் இருந்து காக்கும் நல்ல பாக்டீரியா, அமிலங்கள் வாயிலேயே தங்கி இருக்கவும் இது உதவுகிறது.
எச்சில் உலர்தல் பிரச்னை இருப்பவர்களுக்கு பற்கள், ஈறுகள் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. ஏனெனில், இதுதான் பற்களையும், ஈறுகளையும் வாயில் உள்ள தாதுஉப்புக்களை பயன்படுத்தி வாயை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வைத்திருக்கிறது.
நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்களையும், ஸ்டார்ச்சையும், கொழுப்பையும் உடைத்து செரிமானத்துக்கு ஏற்றவாறு மாற்றுவதற்கான என்சைம்கள் உமிழ்நீரில் உள்ளன. இவ்வாறு, உணவை உமிழ்நீர் சுலபமாகக் குழைத்துக் கூழாக்குவதால், உணவை விழுங்கும் திறனும் செரிமானிக்கும் திறனும் சுலபமாகின்றன. நாவின் சுவை நரம்புகள் உணவின் ருசியை உணர்ந்ததும், அதன் மூலக்கூறுகளின் பண்புக்கு ஏற்ப உமிழ் நீர் சுரக்கிறது. இதனால், உணவுப் பொருட்கள் எளிதாகக் குழைவாக்கப்பட்டு, செரிமானத்துக்குத் தயாராகிறது.
உமிழ் நீரில் நுண் கிருமிகளுக்கு எதிராகப் போராடும் எதிர்ப்பு சக்தி (ஆன்டிபாடி) அதிகம் உள்ளது. தோல் செல்களின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமான இந்த ஆன்டிபாடி, உமிழ் நீரில் அதிகம் உள்ளதால்தான் வேறு இடங்களில் ஏற்படும் புண்களைவிட, வாயில் ஏற்படும் புண்கள் விரைவில் குணமாகிவிடுகின்றன.
ஆல்கஹால், புகைபிடித்தல், போதைப்பொருட்கள் பயன்படுத்துதல் போன்றவற்றை உமிழ் நீரைப் பரிசோதிப்பதன் மூலம் எளிதாகக் கண்டுபிடிக்க முடியும். நோய்களைக் கண்டறியவும் எச்சில் பயன்படுத்தப்படுகிறது.