மரக்காணம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 3,500 ஏக்கர் பரப்பளவில் மத்திய, மாநில அரசுகளுக்குச் சொந்தமான உப்பளங்கள் உள்ளன. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் உப்பு உற்பத்தி தொடங்கும். ஆண்டுதோறும் சுமார் 2.5 மில்லியன் டன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு பல்வேறு வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
பொதுமக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் தொழிற்சாலை இங்கு இல்லை. இதன் காரணமாக உப்புத் தொழில் மட்டுமே பிரதான தொழிலாக உள்ளது. இத்தொழிலை நம்பி இப்பகுதியில் சுமார் 4,000 தொழிலாளர் குடும்பங்கள் உள்ளன. இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை எதிர்பாராத விதமாக வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்தது. இதனால் உப்பளங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

இந்த தண்ணீர் ஜனவரியில்தான் வடிய ஆரம்பித்தது. இதன் காரணமாக இந்த ஆண்டு வழக்கத்தை விட 2 மாதங்கள் தாமதமாக உப்பு உற்பத்தியாளர்கள் முதல் கட்ட உப்பு உற்பத்தியை தொடங்கினர். இப்பணிகள் முடிந்து ஒரு வாரத்தில்தான் உப்பு உற்பத்தி தொடங்கியது. இந்நிலையில் நேற்று எதிர்பாராத கனமழை பெய்தது. இதனால் உப்பளங்களில் குட்டை போல் மழைநீர் தேங்கி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த மழைநீர் வடிய குறைந்தது 10 நாட்கள் ஆகும். தொடர்ந்து மழை பெய்தால் உப்பு உற்பத்தி துவங்க பல நாட்கள் ஆகும் என உப்பு உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். இந்த மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு உற்பத்தியாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.