தூத்துக்குடி: கோடை மழையால் தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக குஜராத்தில் இருந்து தூத்துக்குடிக்கு உப்பு வருகிறது. இந்தியாவில் குஜராத்தை அடுத்து தூத்துக்குடி மாவட்டம் இரண்டாவது பெரிய உற்பத்தியாகும். இங்கு சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. உப்பு தொழிலில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இங்கு ஆண்டுக்கு சராசரியாக 2.5 மில்லியன் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை முடிந்ததையடுத்து உப்பள உரிமையாளர்கள் உப்பு உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஜனவரி கடைசி வாரம் வரை மழை பெய்ததால், உப்பளங்களை சீரமைத்து, உப்பு உற்பத்தி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் இந்த ஆண்டு பிப்ரவரி இறுதியில்தான் புதிய உப்பு வரத்து தொடங்கியது. புதிய உப்பு வந்த இரண்டாவது வாரத்தில் கோடை மழை குறுக்கிட்டதால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது.

அதன்பின்னர் அவ்வப்போது பெய்து வரும் கோடை மழை உப்பு உற்பத்தியை தொடர்ந்து பாதித்து வருகிறது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் முழு கொள்ளளவிற்கு உப்பு உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் தூத்துக்குடியில் போதிய உப்பு இல்லாததால் விலையும் அதிகரித்துள்ளது. இதனால் குஜராத்தில் இருந்து கப்பல் மூலம் தூத்துக்குடிக்கு உப்பு கொண்டு வரக்கூடிய நிலை உருவாகியுள்ளது.
குஜராத்தில் இருந்து கன்டெய்னர்களில் சுமார் 3 ஆயிரம் டன் உப்பு கப்பல் மூலம் இரண்டு நாட்களுக்கு முன்பு தூத்துக்குடிக்கு வந்தது. இதையடுத்து குஜராத்தில் இருந்து தூத்துக்குடிக்கு மற்றொரு கப்பலில் 35 ஆயிரம் டன் உப்பு வருவதாக உப்பு வியாபாரிகள் தெரிவித்தனர். தூத்துக்குடியில் இருந்து தென் மாநிலங்களுக்கு உப்பு விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது குஜராத்தில் இருந்து உப்பு வந்திருப்பது உற்பத்தியாளர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.