நேற்றிரவு பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து காவல் துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தமிழ்நாடு வெற்றிக் கழகத் தலைவர் விஜய், விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவருக்கே பாதுகாப்பு இல்லை என்றால், சாமானியர்களுக்கு என்ன பாதுகாப்பு என்று தனது சமூக வலைத்தளத்தில் கேள்வி ஒன்றை பதிவிட்டுள்ளார் சசிகலா. அவரது இடுகை கூறுகிறது:
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் திரு. ஆம்ஸ்ட்ராங் ஆறு பேர் கொண்ட கும்பலால் கொடூரமான முறையில் வெட்டிக் கொல்லப்பட்டது, அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கிறது. இது திட்டமிட்ட கொலை என்று செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் உளவுத்துறை முற்றிலும் தோல்வியடைந்து விட்டதையே இது காட்டுகிறது.
ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவருக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை என்றால் சாமானியர்களுக்கு எங்கே பாதுகாப்பு? புரட்சித் தலைவி அம்மா ஆட்சியில் அமைதிப் பூங்காவாக இருந்த தமிழகத்தை இன்று கொலைக்களமாக மாற்றியது திமுக தலைமையிலான அரசின் சாதனையா? தமிழக முதல்வரின் சட்டமன்றத் தொகுதியான கொளத்தூர் செம்பியம் காவல் நிலையம் அருகே இந்தக் கொலை நடந்திருப்பது இன்று தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்குச் சீர்குலைந்துள்ளது என்பதை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது. படுகொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்து இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் கத்தி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் சட்ட விரோத செயல்கள், போதை கலாசாரம், கள்ளச்சாராயம் விற்பனை ஆகியவற்றை கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருக்கும் திமுக தலைமையிலான அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.
இந்த படுகொலைக்கு காரணமான உண்மையான குற்றவாளிகளை உடனடியாக கண்டறிந்து அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைமையிலான அரசை கேட்டுக்கொள்கிறேன். ஆம்ஸ்ட்ராங்கை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.